தமிழ்
இந்தப் பக்கம் சுவிட்சர்லாந்தின் தேசிய மொழிகளை பேசத்தெரியாத அல்லது குறைவாகப் பேசும் நபர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்புச் சேவை மற்றும் காரித்தாஸ் அமைப்பின் Se Comprendre சேவை பற்றிய தகவல்களை நீங்கள் இங்கே காணலாம். தொடர்பு படிவத்தின் மூலம் உங்கள் சொந்த மொழியிலேயே கருத்துக்களை, கேள்விகளை நேரடியாக எங்களுக்கு அனுப்பலாம்.
தொடர்புப் படிவம்
உங்கள் கேள்விகளுக்குப் பதில் அளிக்கவும், உங்களுக்கு கூடுதல் தகவல்களை வழங்கவும் அல்லது எதிர்பார்த்தபடி நடைபெறாத ஒரு அமர்வு குறித்து உங்களிடம் செவிமடுக்கவும் நாங்கள் தயாராக உள்ளோம்.
உங்கள் செய்தி Se Comprendre சேவையால் ரகசியமாகக் கையாளப்படும்: உங்கள் வெளிப்படையான ஒப்புதல் இன்றி உங்கள் பெயர், உங்கள் சூழ்நிலை ஆகியவை மூன்றாம் தரப்பினருக்கு (உதாரணமாக மொழிபெயர்ப்பாளர்களுக்கு) தெரிவிக்கப்பட மாட்டாது. ஏழு வேலை நாட்களுக்குள் நீங்கள் பதிலைப் பெறுவீர்கள்.
மொழிபெயர்ப்பாளரின் பங்கு
உங்களுக்கும் தொழில்முறை நிபுணர்களுக்கும் இடையிலான உரையாடல்களை மொழிபெயர்ப்பதற்காகவே மொழிபெயர்ப்பாளர் உள்ளார். நீங்கள் சிறப்பாகப் புரிந்து கொள்ள உதவும் பட்சத்தில் கலாச்சாரம் சார்ந்த கூடுதல் தகவல்களையும் அவர்கள் வழங்கலாம். மொழிபெயர்ப்பாளர்களின் கடமைகள்:
1 - தொழில்முறை ரகசியத்தைப் பாதுகாத்தல்
திட்டமிடப்பட்ட அமர்வுகளுக்கு வெளியே உங்கள் உரையாடல்களைப் பற்றி பேச மொழிபெயர்ப்பாளர்களுக்கு அனுமதி இல்லை.
2 – வெளிப்படைத்தன்மை
உரையாடுபவர்களுடன் தங்களுக்கு உள்ள குடும்ப அல்லது நட்புரீதியான உறவுகளை வெளிப்படுத்த மொழிபெயர்ப்பாளர்கள் கடமைப்பட்டுள்ளனர்.
3 - அனைத்தையும் மொழிபெயர்க்க வேண்டிய கடமை
அறையில் பேசப்படும் அனைத்தையும் மொழிபெயர்ப்பாளர்கள் மொழிபெயர்க்க வேண்டும். நீங்கள் மொழிபெயர்க்க விரும்பாத விடயங்களும் இதில் அடங்கும்.
4 – நடுநிலைமை
மொழிபெயர்ப்பாளர்கள் நடுநிலையுடன் இருக்கக் கடமைப்பட்டுள்ளனர். மேலும் விவாதத்தில் எந்தப் பக்கமும் சாரக்கூடாது. பயனாளிகளுக்கு அறிவுரை வழங்கவோ வழிகாட்டவோ அவர்களுக்கு உரிமை இல்லை.
மொழிபெயர்ப்பாளர்கள் INTERPRET அமைப்பின் தொழில்முறை நெறிமுறைகளுக்கு உட்பட்டவர்கள்
பயனாளியின் உரிமைகள்
அமர்வின் போது பயனாளிக்குப் பின்வரும் உரிமைகள் உள்ளன:
- மீண்டும் கூற, மாற்றி அமைக்கச் சொல்லிக் கேட்பது
- சரியான தகவல்களைப் பெறுவது மற்றும் தொழில்முறை நிபுணர் கூறுவதைப் புரிந்து கொள்வது.
சமூக மொழிபெயர்ப்பின் நோக்கங்கள்
- புலம்பெயர்ந்தோருக்குரிய பொதுச் சேவை சலுகைகள் மற்றும் சேவைகளில் பாகுபாடற்ற அணுகுமுறையையும் சமமான நடத்தையையும் உறுதி செய்தல்.
- தகவல்கள் சரியாகக் கடத்தப்படுவதை உறுதி செய்தல்; வேறுபாடுகளைப் (கலாச்சார, சமூகப் பொருளாதார, சமூகம் சார்ந்த, மொழி, நம்பிக்கைகள் போன்றவை) புரிந்துகொள்ள வழிசெய்தல்.
- பரஸ்பர புரிதலுக்குத் தேவையான சூழ்நிலைகளை உருவாக்குதல்.
கள நிபந்தனைகள், நடைமுறைகள்
- சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, அமர்விற்கு முன்னும் பின்னும் நிபுணர் அல்லது சேவை வழங்குபவர் மொழிபெயர்ப்பாளருடன் ஒரு சுருக்கமான உரையாடலை மேற்கொள்கின்றார்.
- நிபுணர் உரையாடலை நடத்துவதற்கும், சந்தேகங்களைத் தெளிவுபடுத்துவதற்கும் பொறுப்பேற்கின்றார்.
- பங்கேற்பாளர்கள் முத்தரப்பு உரையாடல் முறையில் அமர்த்தப்படுகிறார்கள்.
- நிபுணர் தேவையான அடிப்படை நிபந்தனைகளை உறுதி செய்கின்றார். (நேரம், இடம், இருக்கை ஒதுக்கீடு, கண் தொடர்பு போன்றவை)
- உரையாடுபவர்கள் சிறிய, தெளிவான மற்றும் எளிமையான வாக்கியங்களைப் பயன்படுத்துகிறார்கள்.
- தொடர் மொழிபெயர்ப்பை எளிதாக்கும் வகையில் உரையாடுபவர்கள் தங்கள் பேச்சை முறைப்படுத்துகிறார்கள்.
இந்த விதிகள் விவாதம் நல்ல சூழ்நிலையில் நடைபெற உதவுகின்றன.
உதவி மையம்
உங்களுக்காக ஒரு உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது.
நோக்கம்: பயனடைபவர்கள் தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் ஒரு இடைநிலையாளரை அணுகி தகவல் அல்லது ஆலோசனை கேட்கவும், வழிகாட்டுதல் பெறவும், நிர்வாக நடைமுறை ஒன்றில் உதவி பெறவும், அல்லது வெறுமனே தங்கள் பேச்சைக் காது கொடுத்துக் கேட்க ஒருவரை கண்டறியவும் அனுமதிப்பதே இதன் நோக்கமாகும்.
பயனுள்ள தகவல்கள்
திறந்திருக்கும் நேரங்கள் மற்றும் மொழிகள்
- திங்கள்: 09h00 – 12h00
அரபு, குர்திஷ் (பாடினி மற்றும் குர்மாஞ்சி), ஆங்கிலம் மற்றும் துருக்கிய மொழிகளுக்கு 079 567 89 71 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
- திங்கள்: 14h00 – 17h00
அம்ஹாரிக் மற்றும் டிக்ரின்யா மொழிகளுக்கு 079 136 78 26 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
இடம்: Boulevard de Pérolles 55, 1700 Fribourg
*இந்த மொழிபெயர்ப்புச் சேவை சுவிஸ் காரித்தாஸ் பயனாளிகளுக்கு மட்டுமே.